×

விவசாயி கொலை வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது

ஆத்தூர், மே 3: ஆத்தூர் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் 8 பேரை கைது செய்தால்தான் விவசாயி உடலை வாங்கிக்கொள்வோம் என கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள மல்லியகரையை அடுத்த மேல்தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல் (60). இவரது விவசாய தோட்டத்துக்கு அருகில், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ராஜூ (64) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள மா மரத்தின் காய்ந்த இலைகள், ஜோதிவேல் தோட்டத்தில் விழுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. கடந்த 30ம் தேதியன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ராஜூ மற்றும் அவரது உறவினர்கள் வினோ, அருள்மணி, வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து ஜோதிவேலை சரமாரியாக தாக்கினர். இம்மோதல் குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், மல்லியகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த விவசாயி ஜோதிவேல், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனால் மல்லியகரை போலீசார், அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அருள்மணியை (30) கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜூ (70), வினோ (30) ஆகியோரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆர்ஐ வெங்கடேசை தேடி வருகின்றனர். அவர் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்ற தகவலால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ஜோதிவேலின் உடல், சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவரது மனைவி நீலாவதி, மகன் பெருமாள் உள்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், இக்கொலையில் மேலும் 4 பெண்களுக்கு தொடர்புள்ளது. அதனால், 8 பேரையும் கைது செய்தால்தான், தந்தையின் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என பெருமாள் கூறினார்.

தொடர்ந்து 50 பேரும் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். அங்கு நுழைவுவாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.  பாதுகாப்பு பணியில் இருந்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது தந்தை சாவுக்கு நியாயம் கிடைக்க கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும், என்றனர்.  இதையடுத்து பெருமாள் தலைமையில் 10 பேர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பேரில் அவர்கள் அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த பெருமாள் உள்ளிட்ட உறவினர்களிடம் மல்லியகரை போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிலும், இக்கொலையில் தொடர்புள்ள 8 பேரையும் கைது செய்தால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் கூறினர். பின்னர் அவர்கள், அங்கிருந்து கலைந்து மல்லியகரைக்கு புறப்பட்டுச் சென்றனர். கொலையான விவசாயி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விவசாயி கொலை வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Athur ,
× RELATED விவசாயி வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது